சென்னை: கரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக தமிழ்நாடு முழுவதும் பரவியது இந்த பரவலை குறைப்பதற்காக தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்தது.
முழு ஊரடங்கு காரணமாக கரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்தது. இதனால், தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகனை அறிவித்து வருகிறது. குறிப்பாக, நோய்த்தொற்று மிகவும் குறைந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் கூடுதலாக கோயில்கள், வணிக வளாகங்கள் திறக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
கோயில்கள் திறப்பு
அதன்படி, 4 மாவட்டங்களில் காலை முதல் அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டன. கோயில்கள் திறக்கப்பட்டாலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. பக்தர்கள் உள்ளே வருவதற்கு முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அதேபோல் திருநீறு, குங்குமம் முதலியவற்றை கையால் வழங்கக்கூடாது என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தி. நகரில் உள்ள திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்தனர். தமிழ்நாடு அரசு அறிவித்த அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஒரு மாதத்துக்குப் பிறகு கோயிலுக்கு வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மகிழ்ச்சியில் மக்கள்
இது தொடர்பாக நம்மிடம் பேசிய கார்த்திக், "ஒரு மாதத்துக்கும் மேலாக கோயில்கள் திறக்கப்படவில்லை. தற்போது திறக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் கோயிலுக்கு வந்து விடுவோம். ஒரு மாதம் கோயில்கள் மூடப்பட்டிருந்தது. இதனால் வர இயலவில்லை. தற்போது கோயில்களை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கோயில் நிர்வாகிகள் பின்பற்றுகின்றனர்" என்றார்.
அதேபோல், சென்னையில் உள்ள வணிக வளாகங்கள் அனைத்தும் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டது. வணிக வளாகத்திற்கு உள்ளே செல்வதற்கு முன்பு முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா? என்பதை வணிக வளாக நிர்வாகிகள் கண்காணிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் மக்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர். சென்னையிலிருந்து பல்வேறு பகுதி மக்கள் காலை முதல் வணிக வளாகத்திற்கு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'களைகட்டிய காஞ்சி' - கோயில்கள் திறப்பு.. பக்தர்கள் மகிழ்ச்சி..