சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழாவானது சிவ பெருமானின் பெருமையைப் பறைசாற்றும்விதமாக அந்தந்தத் திருக்கோயில்களில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஆகம விதிகளுக்குள்பட்டு நடைபெற்றுவருவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள மகா சிவராத்திரி திருவிழா சிறப்பாக, வெகு விமரிசையாக நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அனைத்து சிவாலயங்களிலும் வரும் மார்ச் 1 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை முதல் மார்ச் 2 வரை மகா சிவராத்திரி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஆடல் வல்லான் சிவ பெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படி நமது பாரம்பரிய கலை, கலாசார, ஆன்மிக சமய நிகழ்ச்சிகளை நடத்திடத் திருக்கோயில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மகா சிவராத்திரி கொண்டாடப்படும் திருக்கோயில்களில் குறிப்பாகக் கோபுரங்களில் முழுமையாக மின் அலங்காரங்கள் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செய்யவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் உரிய வரிசைத்தடுப்பு வசதிகள், காவல் துறை பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள், கழிவறை மற்றும் சுகாதார வசதி, குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடம், தேவையான இடங்களில் தீயணைப்புத் துறை வாகன நிறுத்தம் ஆகியவை ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி விழாவில் மங்கள இசை, நாட்டிய நாடகம், பரத நாட்டியம், வில்லிசை, கிராமிய பக்தி இசை பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்து மகா சிவராத்திரி இரவு முழுவதும் பக்தர்களும், சேவார்த்திகளும் கண்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
மேலும் சிவராத்திரி நிகழ்ச்சிகள் அனைத்தும் கொரோனா தொற்று குறித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பின்பற்றிச் செயல்படத் திருக்கோயில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு சிவராத்திரி திருவிழா அனைத்து சிவாலயங்களிலும் மிகவும் சிறப்பாக நடைபெறும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.