சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்துள்ளவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மகளிர் உரிமைத்தொகை வரும் 10ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில், திமுகவினுடைய தேர்தல் அறிக்கையில் மகளிர்-க்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி, மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அதில் கள ஆய்வு செய்யப்பட்டு, ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளர்கள் தகுதியானவர்கள் என்ற அடிப்படையில், தமிழக அரசு தேர்வு செய்து, அவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக அவர்களின் வங்கிக் கணக்கில் தலா 1,000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: மதுபோதையில் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த மருத்துவர்.. வைரலாகும் வீடியோ!
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்து, அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தால், நியாயமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வரை சுமார் 11.85 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து, அதன்படி இவர்களில் 8 லட்சம் பேருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 14ஆம் தேதியே பயனாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், இம்மாதம் தீபாவளி 12 ஆம் தேதி வருவதால், பண்டிகையை முன்னிட்டு 10ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய டிராக்டர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர் - வெளியான அதிர்ச்சி வீடியோ!