நாட்டில் கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும் தொடர்ந்து சில இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ளன.
இந்த நிலையில், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கல்வி உள்ளிட்ட எந்த காரணங்களுக்காவும் தங்களது வீடுகளுக்கு மாணவ, மாணவியர்களை அழைக்கக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மாணவர்கள் ஆசிரியர்களின் வீடுகளுக்கு கட்டாயம் சென்றாகவேண்டும் என்ற சூழல் ஏற்பட்டால், இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முன் அனுமதி பெறவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இது பற்றி விளக்கம் அளித்துள்ள பல்கலை நிர்வாகம், 'பாலியல் தொந்தரவு இல்லாத வளாகம்' என்ற முனைப்புடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பாலியல் தொல்லை உள்ளிட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும், பேராசிரியர் ரீட்டா ஜான் தலைமையிலான குழுவிடம் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள், பேராசிரியர் உள்ளிட்டோர் தவறு செய்யும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.