சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (டிச.16) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைமைச் செயலாளர் அறிக்கையின் அடிப்படையில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

அலுவலர்களின் கடமை
மேலும், சர்வே எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அலுவலர்களுக்குத் தெரியும் என்பதால் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அலுவலர்களின் கடமை" எனத் தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பின்னும் மீண்டும் முளைத்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எச்சரித்த நீதிபதிகள், இது சம்பந்தமாக தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க ஆலோசனைகளை வழங்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களைக் கேட்டுக் கொண்டனர்.

எந்த பயனும் இல்லை
இதையடுத்து, மனுதாரர் தரப்பில், மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். குழு அமைப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டனர்.

மேலும், இணையதளத்தில் சர்வே எண்ணைக் குறிப்பிட்டால் மட்டுமே நீர்நிலைகளின் விவரங்கள் தெரிய வருகிறது என்பதால், நீர்நிலைகள் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள் கருத்துக்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்குகளின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: இனி பெண்களின் திருமண வயது 21 - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரம்: தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல்