சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள "ருத்ரன்" திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். வெகு நாட்களுக்குப் பிறகு நடிகர் பிரபல டான்ஸ் மாஸ்டரான ராகவா லாரன்ஸின் நடிப்பில் திரையரங்குகளில் வெளிவரும் படம் ருத்ரன். இந்த படத்தை இயக்குநர் கதிரேசன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இப்படம் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. 12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் ரெவன்ஸா நிறுவனம் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தியிருந்தது. இந்நிலையில் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் எனக்கூறிய ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் திடீரென இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக மத்தியஸ்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் ஏப்ரல் 14-ம் தேதி படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளதாகவும், திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனுமதித்தால் தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகி ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மேல் வழக்கு தொடர்ந்தது.
இது குறித்து இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி படத்தை ஏப்ரல் 24-ம் தேதி வரை வெளியிடக் கூடாது என இப்படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதித்து, மனுவுக்குப் பதிலளிக்கும்படி படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். தடையை நீக்கி படத்தைத் திரையிட அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிபதி முன்பு ராகவா லாரன்ஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைக் கேட்ட நீதிபதி வழக்கை நாளை (ஏப்ரல் 13) விசாரிப்பதாகத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: அயோத்தி திரைப்படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்