சென்னை: சென்னை அசோக் நகரில் லிப்ரா ப்ரொடக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர், தன்னிடம் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார்.
அதில், நகராட்சி திடக்கழிவுகளை இயக்க ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், 200 கோடி ரூபாய் மதிப்பிலான அந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி, தன்னை திட்டமிட்டு திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து பணத்தைத் திருப்பி தராமல் மோசடி செய்ததாகவும் கூறியிருந்தார்.
இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், செப்டம்பர் 7-ஆம் தேதி ரவீந்தர் சந்திரசேகரைக் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவீந்தர் சந்திரசேகர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து ரவீந்தர் சந்திரசேகர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் வழக்கறிஞர் வேல்முருகன் ஆஜராகி, தொழிலதிபர் பாலாஜியிடம் இரண்டு கோடி ரூபாய் திரும்ப அளித்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, புகார் தாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ரவீந்தர் இரண்டு கோடி தந்துவிட்டதாகக் கூறுவது பொய் என்றும், தற்போது வரை ரூ.16 கோடி திரும்பத் தராததாகவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, ரவீந்தர் சந்திரசேகர் இரண்டு கோடி ரூபாய் வழங்கியதாகக் கூறப்படும் ஆவணங்களை காவல்துறை சரிபார்த்து, அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 6-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!