சென்னை: சாலைகளில் கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக தனித்தனி லேன்கள் எனப்படும் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த லேன் ஒழுங்குமுறைகளை பின்பற்றாததால் விபத்துகள் அதிகரித்துள்ளதாக கூறி, சென்னையைச் சேர்ந்த குமாரதாஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சென்னை மாநகரத்தில் 45 லட்சம் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இது உலகளவில் அதிக எண்ணிக்கையில் இரு சக்கர வாகன இயக்கப்படும் நகரமாக உள்ளது. மேலும், சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும் 53 நகரங்களில் சென்னை முதலிடத்திலும், சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் மாநிலத்தில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் தனது 2021 அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சாலைகளில் எந்தெந்த வாகனங்கள் எந்த லேன்களில் பயணிக்க வேண்டும் என என்னென்ன விதிமுறைகளை நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது என தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்படதற்கு அதிகாரிகள் சரியான பதில் வழங்கவில்லை. 2000 முதல் 2010 வரை லேன் பாதையில் பயணிக்காததால் எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது? சாலை விதிமீறல்கள் வழக்கு எவ்வளவு பதிவு செய்யப்பட்டுள்ளது? பதிலளிக்க வேண்டும் என 2022 ம் ஆண்டு தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை.
ஒதுக்கப்பட்ட வழியில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதில்லை எனவும், இதுசம்பந்தமாக காவல்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, சென்னை சாலைகளில் லேன் ஒழுங்குமுறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் அவரது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வு, இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தது.