சென்னை: அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்ட மறு ஆய்வு மனுக்களை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பிடம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006 மே 15 முதல் 2010 மார்ச் 31 வரையிலான திமுக ஆட்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு 76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து குவித்ததாக, கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
அந்த வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தங்கம் தென்னரசு மற்றும் அவரின் மனைவி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தங்கம் தென்னரசு மற்றும் அவரின் மனைவிக்கு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, தாமாக முன்வந்து எடுத்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீடு தொடர்பான விபரங்கள், அனைத்து தரப்பினருக்கும் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மேலும், இதுபோன்று தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்த நீதிபதி, வழக்கின் வாதங்களை தொடங்க அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: திருமணமான பெண் தனது பிறந்த வீட்டின் தொடர்பைத் துண்டித்துவிட்டார் எனக் கூற முடியாது - நீதிமன்றம்!