சென்னை: 2019ஆம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவி சென்னை மருத்துவக் கல்லூரியில் மே 1ஆம் தேதி சேர்ந்தார். அதன்பின்னர் இரண்டு நாட்களிலேயே மருத்துவ காரணங்களுக்காக படிப்பைத் தொடர முடியவில்லை எனக் கூறி தன் சான்றிதழ்களை திருப்பித்தரும்படி கல்லூரியில் கோரினார். ஆனால், படிப்பை பாதியில் நிறுத்தினால் 15 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டுமென்ற விதிப்படி, அதை செலுத்தும்படி கல்லூரி முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து அந்த உத்தரவை எதிர்த்து மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி 2019ஆம் ஆண்டு மே 31 முடிவடையும் நிலையில் மே 3ஆம் தேதியே படிப்பிலிருந்து விலகுவதாக விண்ணப்பித்துள்ளதால் சான்றிதழ்களை வழங்கும்படி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து தேர்வு குழு மற்றும் கல்லூரி டீன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதச்சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வுக் குழு மற்றும் கல்லூரி முதல்வர் தரப்பில் ஒரு மாணவருக்கு அரசு பல லட்ச ரூபாய் அளவிற்கு செலவுகளை செய்யும் நிலையில், ஒரு இடம் காலியாவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும்; மருத்துவப் படிப்பில் மதிப்புமிக்க ஒரு இடம் வீணாகிறது என்றும் கூறி, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேதி முடிவதற்கு முன்பாகவே, இந்த மாணவி தனக்கு வழங்கப்பட்ட இடத்தை ஒப்படைத்துவிட்டதால், அந்த இடத்தை அவருக்கு அடுத்தபடியாக பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு ஒதுக்கி இருக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கட்டணம் வசூலிப்பது தொடர்பான விளக்கக்குறிப்பில் சில தெளிவின்மை இருக்கத்தான் செய்கிறது எனக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள் சான்றிதழ்களை பெற 15 லட்சம் ரூபாயை மாணவி செலுத்த வேண்டுமென பிறப்பித்த உத்தரவு செல்லாது எனக் கூறி தனி நீதிபதி உத்தரவை உறுதிசெய்து, அரசின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் 2 வாரத்தில் சான்றிதழ்களை மாணவியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை நியூ காலேஜ் மாணவர் மீது தாக்குதல்; முன்னாள் மாணவர் கைது!