சென்னை: திருநெல்வேலி காவல் ஆணையரிடம் கேரளாவைச் சேர்ந்த சர்மிளா என்பவர் புகார் அளித்திருந்தார். அதில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தன்னிடம் ரூபாய் 14 கோடி வாங்கியதாகவும், அதில் ரூபாய் 3 கோடி மட்டும் திருப்பி தந்துவிட்டு, மீதி பணத்தைத் தராமல் மிரட்டுவதாகவும் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பான தகவல் செய்தி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் வெளியானது. மேலும், புகார் அளித்த கேரளாவைச் சேர்ந்த சர்மிளாவும், இதுகுறித்து பதிவுகளைப் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சர்மிளாவுக்கு எதிராக மான நஷ்ட ஈடு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நித்யேஷ் நட்ராஜ், வைபவ் வெங்கடேஷ், அனிருத் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதனையடுத்து நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அமைச்சராக இருந்துள்ளார். சமூகத்தில் பெரிய பொறுப்பிலிருந்தவர். கரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர் எனக் கூறிய அவர் மீது இது போன்ற தவறான அவதூறுகளைக் கூறக்கூடாது என்று கூறினார்.
மேலும், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்த குற்றத்திற்காக ரூபாய் 1 கோடியை மான நஷ்ட ஈடாக, சர்மிளா செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், சமூக வலைத்தளங்களில் சி.விஜயபாஸ்கர் குறித்து சர்மிளா பதிவிட்டு இருந்த பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தால் அவற்றையும் நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.