சென்னை, விருகம்பாக்கம் சின்மயா நகரைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (27). இவர் ராயலா நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.
வழக்கம்போல் இவர் நேற்றிரவு (ஆக.27) தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்குக் காவல் உடை அணியாமல் சாதாரண உடையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலை அருகே திரும்பிய போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தார்.
அவர் கீழே விழுந்து இருப்பது தெரியாமல் பின்னால் அதிவேகமாக வந்த சொகுசு கார், மனோஜ் குமார் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு மனோஜ் குமாரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பி ஓடிய கார் ஓட்டுநரான மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் (47) என்பவரைக் கைது செய்து. கிண்டி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.