சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna university) பொறியியல் மாணவர்களுக்கான புத்தகக் கண்காட்சி (Book Exhibition) இன்றும் (நவம்பர் 23), நாளையும் (நவம்பர் 24) நடைபெறுகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ், பதிவாளர் ரவிக்குமார் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய துணைவேந்தர் (Vice Chancellor Velraj) வேல்ராஜ், "பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குப் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். புத்தகங்களைப் படித்துப் பயன்பெற வேண்டும்.
தமிழ் வழியில் பொறியியல் படிப்பு
ஆன்லைன் மூலம் படிப்பதைவிட புத்தகத்தில் படிப்பது சிறந்தது. பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும். பொறியியல் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு தொடங்கப்பட உள்ளதால் அதற்கு முன்னர் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்.
பொறியியல் படிப்பை தமிழ் வழியில் படித்தால் எளிதில் புரிந்துகொண்டு படிக்க முடியும். மேலைநாடுகளில் அவர்களின் தாய்மொழியில்தான் பொறியியல் படிப்பை நன்கு புரிந்துகொண்டு கற்கின்றனர். இதனால் நாமும் தாய்மொழியில் பொறியியல் படிப்பை படிக்கலாம்.
புதிய பாடத்திட்டம்
பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டம் புதுப்பித்து வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பாடச் சுமையைக் குறைக்கும் வகையில் முதலாம் ஆண்டில் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட பாடங்கள் மூன்றாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளன.
பொறியியல் படிப்பைப் படிக்கும்போதே மாணவர்கள் ஆன்லைன் மூலம் சான்றிதழ் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விடைத்தாள் மறு மதிப்பீட்டுக் கட்டணம் குறைப்பது குறித்து குழு அமைத்து ஆலோசிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரி வேளாண் துறை இயக்குநரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்