சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சுகாதாரத்துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு வருகின்றன. பேரிடர் காலங்களில் ஏற்படும் நோயைத் தடுக்கும் வகையில் அடுத்த மூன்று மாதத்திற்குத் தேவையான 120 கோடி மதிப்பிலான மருந்துகள் தயார் நிலையில் உள்ளது. தற்போது சென்னையில் 205 முகாம்கள் நடத்தப்பட்டு 8,000 பேர் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 1,500 மருத்துவ முகாம்கள் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மழைக்காலம் மருத்துவ முகாமில் இதுவரை 60 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மாவட்ட மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் மழைக்காலம் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களுக்குக் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதைக் கண்டறிந்து தடுக்கும் விதமாக மருத்துவ முகாம்கள் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மழைக் காலத்தில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளப் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். மழைக்காலங்களில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டு மருத்துவமனைகளில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மின்சாரம் தடைப்பட்டாலும் தொடர்ந்து சிகிச்சை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் போன்றவற்றில் தேங்கி உள்ள நீரினை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறையுடன் இணைந்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 835 பேருக்கு கரோனா பாதிப்பு