சென்னை ஐஐடியில் கடந்த மாதம் ஃபாத்திமா லத்தீப் என்ற மாணவி தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று முதலில் கூறப்பட்டாலும், அவரது செல்போனில் தனது மரணத்திற்குக் காரணம் பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரா, மிலின் பிராமே என்று பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற பகீர் தகவலை அவரது தந்தை வெளியிட்டார். தற்போது இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஐஐடி இயக்குநருக்கு மு.மு.க என்று குறிப்பிட்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில் ஃபாத்திமா மரணத்திற்கு நல்ல தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்றும்; கிடைக்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட மூன்று பேராசிரியர்களும் மாணவி தற்கொலை செய்து கொண்டதைப் போல், தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஐஐடி இயக்குநர், அந்த மிரட்டல் கடிதத்தை பதிவாளரிடம் கொடுத்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் செய்தார்.
இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்தக் கடிதத்தை எழுதிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வனத்துறையில் முதல் 'திருநங்கை' : பணியில் சேர்ந்தார் ’தீப்தி’