சென்னை : மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார சிக்கல்களை களைய 23 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சோசலிச தொழிலாளர் மையம், குடிசை மாற்று வாரியக் குடியிருப்போர் நலக்கமிட்டி, தமிழ்தேசிய விடுதலை இயக்கம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட 14 அமைப்பை சேர்ந்தவர்கள் வெளியிட்டுள்ளனர்.
குடிசை மாற்று வாரியத்தின் மறு கட்டுமான திட்டக் குடியிருப்புகள், நீர்நிலைகள் - சதுப்புநில குடியிருப்புகள், கடலோர மீனவக் குடியிருப்புகள், பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி குடியிருப்புகள் உள்ளிட்டவையில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை களைய இந்த 23 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் மக்கள்
பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள்," கே.பி.பார்க்கில் இன்றளவும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். குடிநீர் இல்லாமலும், 13 மாடிக்கு லிப்ட் வசதி இல்லாமலும் உள்ளனர். வீடு ஒதுக்க வேண்டும் என்றால் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து வருகிறது.
இதை அதிமுக அரசு கொண்டு வந்தது என்றால் ஏன் திமுக அரசு இதில் நடவடிக்கை எடுக்க கூடாது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என்றால் அரசு கட்டிடங்கள், பறக்கும் ரயில்களின் தூண்கள், தனியார் குடியிருப்புகள் எந்த கணக்கில் சேரும்.
அதே போல் அரும்பாக்கத்திலுருந்து கே.பி.பார்க்கில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு சி.ஆர்.டி.எஸ் (NGO) கட்டணத்தை கட்டியுள்ளது. பேஸ் 1-இல் வசிக்கும் மக்களுக்கு அவர்களே கட்ட வேண்டும். இதற்கான வங்கி கடன் அரசு வாங்கி தரும் என கூறுகிறது. ஆனால் அந்த மக்களால் எப்படி மாதம் கட்டணம் கட்ட முடியும்.
மாபெரும் போராட்டம் நடத்தப்படும்
கே.பி.பார்க் மக்களின் அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்டமாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இதே போல் சென்னை மைய பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மீனவர் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் பிரச்சனைகளிலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு அரசு 'குடியிருப்பு' தொடர்பான கொள்கையை வகுத்திட வேண்டும்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க : தமிழிசை மீதான அவதூறு வழக்கு: ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்