சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் அதிக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்படைந்தது.
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட் காய்கறிச் சந்தைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 1000 டன் காய்கறிகள் சுமார் 100 லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது அந்த காய்கறிகள் விநியோகம் செய்யப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மழை மற்றும் சாலையில் தேங்கிய மழை நீர் காரணமாக மற்ற வியாபாரிகள் கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு வரவில்லை எனவும், காய்கறி விநியோகம் செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகளால் கூறப்படுகிறது. இந்த நிலையில் சாலைகளில் தேங்கிய மழை நீர் அகற்றியப் பின்பு கோயம்பேடு மார்க்கெட் காய்கறிச் சந்தையில் வியாபாரம் சீராகும் என மொத்த வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தாம்பரம் மார்க்கெட் நிலவரம்: சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மழையின் காரணமாக காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளதாக பொதுமக்களால் கூறப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்குச் சென்று காய்கறிகளை வாங்குவதற்கு போக்குவரத்து இல்லாததால் காய்கறிகள் விலை சிறிது உயர்ந்துள்ளதாக தாம்பரம் மார்க்கெட் வியாபாரிகளால் கூறப்படுகிறது.
இதுகுறித்து தாம்பரம் மார்க்கெட் வியாபாரி பாஸ்கர் கூறுகையில், “சென்னையில் அதிக கனமழை பெய்து சாலைகளில் மழைநீர் தேங்கியதால் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்கள் எதுவும் வரவில்லை. இதன் காரணமாக, காய்கறிகளின் விலை சிறிது ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.
கேரட் கிலோ ரூ.70, பீன்ஸ் கிலோ ரூ.80, கத்திரிக்காய் கிலோ ரூ.80, அவரைக்காய் கிலோ ரூ.80 என விற்கப்படுகிறது. மழையின் காரணமாக, கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் வரவில்லை என்பதால் இந்த விலையில் தற்போது விற்கப்படுகிறது. ஆனால், தற்போது வரை வியாபாரம் சுமாராகத்தான் இருக்கிறது. ஒரு சிலர் மட்டுமே சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்” என்று கூறினார்.
காய்கறி வாங்க வந்த மகேஷ் குமார் கூறுகையில், “மழைக்கு முன்பாக தாம்பரம் மார்க்கெட்டில் ரூ.300 இல் அனைத்து காய்கறிகளையும் வாங்கிவிட முடியும். தற்போது ரூ. 350 முதல் ரூ. 400 வரை செலவாகிறது. மழையின் காரணமாக, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பழுத்த நிலையில் உள்ளன.
இந்த விலை ஏற்றதால் சாமானிய மக்கள் சிறிது பாதிப்படைந்துள்ளனர். இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு இதை கண்காணித்து விலை ஏற்றத்தை குறைத்தால் சாமானிய மக்களுக்கு நன்றாக இருக்கும்” என்று கூறினார்.