சென்னை: கடந்த ஜூன் மாதம் கேரள மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்காக, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு சதி திட்டம் தீட்டி இருந்தது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, தீவிரவாத கும்பலை தீவிரமாக கண்காணித்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கேரள மாநிலக் குழு திருச்சூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதக் கும்பலின் தலைவன் சையத் நபில் அஹமதை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். அவர் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மாறி மாறி தலைமறைவாக இருந்து வந்தாக தகவல் கிடைத்து வந்த நிலையில், சையத் நபில் அஹமதை கைது செய்ய சிறப்புக் குழுவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அமைத்து சென்னையில் ரகசியமாக தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சிறப்புக் குழு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவன் சையத் நபில் அஹமதை கைது செய்து உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட தீவரவாத அமைப்பின் தலைவன், போலி பாஸ்போர்ட் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் நேபாள் நாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டது விசாரனையில் தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சையத் நபில் அஹமத் தங்கி இருந்த இடத்தை தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை செய்தனர். அப்போது பல்வேறு முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இதற்கு முன்னதாக சேலம் சத்தியமங்கலம் பகுதியில் தலைமறைவாக இருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஆசிஃப் என்பவரை கைது செய்தனர்.
மேலும், இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பல சர்வதேச தீவிராத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், இவர்கள் பல இடங்களில், இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளில் இணைப்பதற்கான பிரச்சாரம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கபட்டிருந்தது.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட சையத் நபில் அஹமதை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தீவிர விசாரணை மேற்கொள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சிறப்புக் குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.