சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் மாநாடு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே, இந்த மாநாட்டுப் பணிகளுக்காக 9 குழுக்கள் கொண்ட 80க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டிற்கான அழைப்பிதழ் தயாரித்தல் குறித்தும், மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அதற்கான அச்சாரமாகவும், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையிலும், ஆளும் திமுகவிற்கு நாம் யார் என்று நிரூபிக்கும் வகையிலும் இந்த மாநாடு அமைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மாநாட்டின் மேடை மற்றும் முகப்புக்காக, டெல்லி செங்கோட்டை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, நாடாளுமன்றம், போன்ற வடிவங்களில் அமைக்கப்பட்ட மாதிரிகள் கொண்டு வரப்பட்டன. அதனை எடப்பாடி பழனிசாமி உட்பட்ட குழு உறுப்பினர்கள் பார்த்து இறுதி செய்தனர். இன்னும் மாநாட்டிற்கு சரியாக ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, குழு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''இதுவரை தமிழ்நாடு சரித்திரத்தில் யாரும் நடத்திடாத அளவில் ஒரு மாநாட்டை நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உச்ச நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளோம். தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்து உள்ளது. அதனை மானிய விலையில் வழங்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்தோம்.
86 கோடி ரூபாயை கடலில் போடுவது வீண் தான். தமிழ் நாட்டை சூறை ஆடி, ஒரே குடும்பம் மட்டும் வளரும் சூழல் தமிழகத்தில் உள்ளது. நினைவிடம் கடலில் இல்லை, கடற்கரையில் இல்லை என வழக்கறிஞர் வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பேனா சிலையைச் சொந்த செலவில் அண்ணா அறிவாலயத்தில் வைத்து கொள்ளலாம். பேனா சிலை வைப்பதற்குப் பதிலாக அந்த நிதியை அரசின் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்” எனவும்; மக்கள் வரிப்பணத்தில் நினைவுச் சின்னம் வைக்காமல், தங்கள் சொந்த செலவில் எத்தனை நினைவுச் சின்னங்கள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க : Opposition parties meeting: பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு?