சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவினர் மீது திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறி பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நால்வர் குழுவை அமைத்தார். இதில் பாஜக மூத்த தலைவரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான சதானந்தா கவுடா, புரந்தேஸ்வரி ஆகியோர் இடம் பெற்றனர். இந்த குழுவானது இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சதானந்த கவுடா, “சென்னை தற்போது மேற்கு வங்காளம் மற்றும் கேரளா போல் மாறி வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதனால் எங்களுடைய தலைமை அறிவித்தபடி, பாதிக்கப்பட்டவர்களிடம் மிக ஆழமாக விசாரணை மேற்கொள்ள உள்ளோம்.
எங்களைப் பொறுத்தவரை, எங்களது தொண்டர்கள் எந்த ஒரு பாதிப்புக்கும் உள்ளாகக் கூடாது. அதற்காக இதை தேசிய அளவில் எடுத்துச் செல்ல உள்ளோம். இதுபோல, அரசியல் தாக்குதல் மற்றும் அரசியல் காழ்ப்புணர்சி மூலம் பழிவாங்குதலை ஒருபோதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இன்று 30 முதல் 40 பாதிக்கப்பட்ட பாஜக தொண்டர்கள், நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளோம்.
அவர்களிடம் திரட்டப்பட்ட தகவல்களையும், நாளை பாஜக நிர்வாகிகளின் இல்லத்தில் சென்று அவர்களிடம் பெறப்படும் தகவல்களையும் வைத்து, அதன் மூலம் ஒரு கோரிக்கை மனுவைத் தயாரித்து ஆளுநரிடம் வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக ஆளுநரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. எங்களுடைய தேசியத் தலைமைக்கு நாங்கள் மேற்கொள்ளும் விசாரணை அறிக்கையை இரண்டிலிருந்து மூன்று நாட்களில் கொடுக்க உள்ளோம்” என தெரிவித்தார்.