மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஆறாவது மேயர் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கடந்த நவம்பர் 29 தேதி முதல் டிசம்பர் 01 தேதிவரை நடைபெற்றது. இதில் இந்தியா,பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 1500 பேர் பங்கேற்றனர். போட்டிகள் 50 கிலோ,75 கிலோ,90கிலோ என்ற எடை பிரிவின் கீழ் நடத்தப்பட்டன.
இதில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டிலிருந்து ஜப்பான் ஷிட்டோ ரீயூ கராத்தே பள்ளியில் இருந்து ஐந்து மாணவர்கள் கலந்துகொண்டதில், மகேஸ்வரன் (22), சுரேஷ் (40), விக்னேஷ் (23) ஆகியோர் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர். இந்நிலையில், கோலலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த கராத்தே வீரர்களுக்கு விமானநிலையத்தில் அவர்களது பெற்றோர், உறவினர்கள் பூங்கோடுத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மகேஸ்வரன்,
"தமிழ்நாடு அரசு கராத்தே போட்டிக்கு இன்னமும் உரிய ஆதரவும், ஊக்கமும் அளிக்க வேண்டும். அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கராத்தே விளையாட்டைச் சேர்த்துள்ளனர். அதில், கலந்துக்கொண்டு தங்கம் வெல்வதே எனது லட்சியம்" எனத் தெரிவித்தார்.