சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் 25 வது பொதுக்குழு பொன்விழா மாநாட்டின் 3வது நாள் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், க.பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய ஆர். எஸ்.பாரதி, 'ஏறத்தாழ 53 ஆண்டுகளை கண்டு இந்த பேரவை சரித்திர சாதனை பெற்றதாகவும், பொன்முடி அவர்கள் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோதும் மற்றும் நம்முடைய ஆட்சி வரும்போதுதான் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நன்மை உண்டாகும் என்றும் பேசினார்.
இந்த பேரவைக்கு வரும்போது கூட, மகிழ்ச்சியோடு வந்தேன் காரணம்; நமது அரசு, அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தியுள்ளத, மற்ற அணிகளுக்கு நிகராக இந்த பேரவை உள்ளதாகவும் புகழாரம் சூடினார். திமுக ஆட்சியில் உள்ளவரை தொழிலாளர் உரிமை பாதுகாக்கப்படும் என்று கூறிய அவர், இந்த பேரவையில் இன்னும் அதிகமாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: பின்னர் பேசிய அமைச்சர் பொன்முடி, 'தனியாரிடம் இருந்த போக்குவரத்து துறையை அரசு துறையாக மாற்றி தொழிலாளர் நலனைக் காத்த கருணாநிதிக்கு தான் வாழ்த்துக் கூற வேண்டும் என்றார். மத்திய அரசு ஊழியருக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பதே ஜாக்டோ ஜியோ அமைப்பின் நோக்கம் என்று கூறினார். அந்தவகையில், ஒன்றிய அரசு அறிவிக்கும் போதெல்லாம் மாநில அரசிலும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈபிஎஸ் செய்தது: கடந்த பத்தாண்டு ஆட்சியில் அமைப்பு சாரா சங்ககளை கண்டு கொள்ளப்படாமலும், தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மையும் இல்லாமலும் இருந்த நிலையில், தொழிற்சங்கங்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார். மேலும் பேசிய அவர், கள்ளச்சாராயம் அருந்தி மரணமடைந்த செய்தியைக் கேட்டு விழுப்புரம் விரைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தார் என்று குறிப்பிட்டதோடு, அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனக் கூறிய அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி; தற்போது இதனை அரசியல் செய்து வருவதாக' சாடினார்.
அதிமுகவின் அரசியல்: இதனிடையே, ஈபிஎஸ் ஆட்சியில் 20 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்ததாக காவல்துறையின் பதிவேட்டில் உள்ளதாகவும், முன்னாள் மருத்துவத்துறை அமைச்சர் குட்கா கம்பெனியில் ரூ.40 கோடி லட்சம் பெற்று விட்டும் அரசியல் செய்வதாகவும் கடுமையாக சாடினார். அத்துடன் வீட்டு வேலை செய்பவர்கள், முடி திருத்துவோர் என கருணாநிதி அனைவருக்கும் நல வாரியம் அமைத்த நமது அரசு சமூக நிதிக்கக போராடுகிற அரசு என்றார்.
திமுக ஆட்சியில் ஒரு புரட்சி: இவரைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'இந்த தொமுச அமைப்பில் 19 மாநிலங்களில் 29 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதோடு, கருணாநிதியின் ஆட்சியில் தொழிலாளர்களுக்கு என்று தனி அமைச்சகம் அமைத்ததாகவும் பேசினார். அவரது ஆட்சியில் தொழிலாளர் நலனில் தமிழ்நாடு முதலிடத்திலும், குஜராத் இரண்டாம் இடத்திலும் இருந்ததாக தெரிவித்தார். மேலும், 2500 பேரை ஒரே நேரத்தில் பணி நிரந்தரம் செய்ததும், 7600 பேரை மின்வாரியத்தில் பணி நிரந்தரம் செய்ததும் அவரது ஆட்சியில் தான் என்றார். இதனால், திமுக ஆட்சியில் 1996-2006 வரை பணி நிரந்தரம் செய்யப்பட்டது ஒரு புரட்சி என்றார்.
தொழிலாளர் நலன் கருதி, 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 7 தேதியிலும் கூட, 13000 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர் என்று தெரிவித்தார். இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடையில்லை என்ற தீர்ப்பு வந்திருப்பது முதலமைச்சரின் சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று புகழ்ந்தார். இதனிடையே, இதனை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்தவரகளுக்கு ஏமாற்றம் வந்துள்ளதாக' அவர் சாடினார்.
மக்களின் உரிமைக்காக போராடுவோம்: அடுத்ததாக மேடையில் பேசிய கனிமொழி எம்.பி., 'தொழிலாளர், உழைக்கக்கூடிய மக்கள் இல்லையென்றால் உலகம் இல்லை. இதை உணர்ந்தவர்கள்தான் திமுகவினர் என்றும் ஒரு சட்டத்தை எதிர்த்த உடன் அதனை ரத்து செய்தார் என 12 மணி நேர வேலை மசோதா ரத்து ஆகியதை சுட்டிக்காட்டினார். ஆட்சியை எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமை திமுக ஆட்சியில் மட்டுமே உள்ளதாகவும், மக்களின் உரிமைக்காகவே தொடர்ந்து போராட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'இன்று தொழில் வளர்ச்சி என்பது மாறிக்கொண்டே இருக்கக்கூடிய சுழலில், நம்முடைய உரிமைகள் பறிபோவது என்பதை நாம் அறியாமலே உலகத்தைப் பார்கிறோம். கார்ப்பரேட் கம்பெனியில் இன்று அடிப்படை மனித உரிமைகள் இல்லாமல் உள்ளதாகவும், அதனை வலியுறுத்துபவர்கள் உடனே பணியிலிருந்து நிறுத்தப்பட்டு தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
இந்த நிலையில், பெண்களின் கர்ப்பப்பை கூடப் பறிக்கப்படுவதாகவும் ஆனால், தமிழ்நாடு அதனைத் தவிர்த்து வளர்ந்து வருவதாகவும் ஆகவே, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் பேசினார். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நன்மைகளை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், தனது தொகுதியில் உப்பளத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து மழை காலங்களில் வாழ்வாதாரத்திற்கு உதவித்தொகை வழங்கியது என தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியிலும் தொழிலாளர்கள் நலன் பறிக்கப்படுவதாகவும் ஆகவே, அவற்றை ஒன்றிணைத்து பெறப் போராட வேண்டும்' என்று கூறினார்.
ஜல்லிக்கட்டு தீர்ப்பு; தமிழர்களின் வெற்றி: 'நம்முடைய பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. இதற்காக நமது இளைஞர்கள் மெரினாவில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதால் தமிழ் மக்களின் வெற்றி இது. மேலும், இது தமிழர்களுக்கான வெற்றி என்றார். அத்துடன், கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று அம்மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சித்தராமையாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும், நமது இரு மாநிலங்களுக்கும் உள்ள நல்லுறவை மேம்படுத்தும் வகையில் அவர் செயல்படுவார்' என்று கூறினார்.
ஜல்லிக்கட்டு போட்டி தொடரலாம்: தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், இன்று (மே 18) அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், தமிழ்நடு அரசின் கொண்டுவந்த சட்டத்தில் தவறு இல்லை எனக்கூறி ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அத்துடன் வரும் ஆண்டுகளில், விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்' என நீதிபதிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 50 years of Ulagam Sutrum Valiban: எம்.ஜி.ஆர் என்னும் மந்திரம் செய்த மகத்தான செய்கை!