சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நடைபெற்ற வன்முறை தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மக்கள் அதிகார அமைப்பின் மாநிலச் செயலாளர் வெற்றிவேல் செழியன், “ஜூலை 13 ஆம் தேதி கள்ளக்குறிச்சி அருகே மாணவி ஶ்ரீமதி பலியானது தொடர்பாக போராட்டம் வெடித்தது.
மாணவியின் மரணத்தை தமிழ்நாடு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அந்த தனியார் பள்ளியை காப்பாற்ற வேண்டும் என்று தான் தமிழ்நாடு அரசு நினைக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் அதிமுக அரசு மக்களின் கோரிக்கையை எப்படி செவி சாய்க்கவில்லையோ, அதுபோலதான் இந்த பிரச்சனையையும் தமிழ்நாடு அரசு செவி சாய்க்கவில்லை.
கடந்த திங்களன்று விடுமுறை அளித்த 987 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும். அன்று நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த சிலர் மட்டுமே பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் அதிகாரத்தினர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு நடைபெற்ற வன்முறைக்கு அடிப்படை காரணமே தமிழ்நாடு அரசின் போக்கு தான். கல்வி நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என்றுதான் அரசு நினைக்கிறது. அநீதிக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். கலவரத்திற்கு காரணமானவர்களை விட, அந்தப் பள்ளியின் விடுதிக்கு அனுமதி கொடுத்த அலுவலர்தான் குற்றவாளி.
மக்கள் நான்கு நாட்களாக போராட்டம் நடத்தியும், நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்தான் குற்றவாளி” எனக் கூறினார். தொடர்ந்து கலவரம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாத மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர்கள் வெற்றிவேல் செழியன், “நாங்கள் போராட்டத்தை பற்றி மட்டும் தான் பேச முடியும்.
அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் கலவரத்தில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் கைது செய்து கொள்ளலாம். மேலும் பள்ளி கலவரத்தில் சூறையாடியவர்கள் பேருந்துகளை கொளுத்தியவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரம்: ட்விட்டர், யூ-டியூப் தளங்களை கண்காணிக்கும் போலீஸ்!