சென்னை தலைமைச்செயலகத்தில் தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் இரு தரப்பினரும் அருகருகே அமர்ந்தும் ஒருவரின் முகத்தை மற்றொருவர் பார்க்காமல் அமர்ந்திருந்தனர்.
அதிமுகவில் சமீபகாலமாக ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இறுதியாக எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. அப்போதே எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமார் கலந்து கொள்வார்கள் என்றும்; ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோவை செல்வராஜ் கலந்துகொள்வார் எனவும் கூறி இருந்தனர்.
இன்று (ஆகஸ்ட் 1) தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனைக்கூட்டத்திற்கு முதல் ஆளாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து கோவை செல்வராஜ் கலந்துகொண்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வந்தனர்.
வந்த சிறிது நேரத்தில் ஜெயக்குமார், கோவை செல்வராஜூக்கு முன்பு இருந்த அதிமுகவின் பெயர்ப்பலகையை தன் பக்கம் எடுத்துவைத்துக்கொண்டார். இதனால் அதிமுகவினர் யார் என்ற சர்ச்சை ஏற்பட்டது. மேலும் இந்த செயல் மற்ற கட்சியினரிடையே வியப்பாகப் பார்க்கப்பட்டது.