சென்னை: ஜல்லிக்கட்டு என்றாலே பெரும்பாலானோருக்கு மதுரைதான் நினைவுக்கு வரும். ஆனால் சென்னையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா? நீங்கள் சென்னை செல்வதற்கு சரியான தேதி மார்ச் 5ம் தேதி தான். ஏன் தெரியுமா? தென் தமிழ்நாட்டில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் முதன் முறையாக சென்னையில் நடைபெற உள்ளன.
ஜல்லிக்கட்டு என்றாலே நினைவுக்கு வருவது மதுரை தான். அலங்காநல்லூர், பாலமேடு என உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு களங்கள் மதுரையில் தான் உள்ளன. 2017ம் ஆண்டில் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் சென்னையில் தான் நடைபெற்றது. இருந்தாலும், இதைத் தவிர ஜல்லிக்கட்டுக்கும் சென்னைக்குமான தொடர்பு ஷாப்பிங் மால்களில் வைக்கப்படும் காளை பொம்மையுடன் நிறைவடைந்து விடும்.
தலைநகர் சென்னையின் இந்த குறையைப் போக்க சென்னையிலும் காளைகள் திமில் புடைத்து சீறப்போகின்றன. காளைகளை அடக்க மாடுபிடி வீரர்களும் புழுதி பறக்க மல்லுக்கட்டப் போகிறார்கள். இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தமிழ்நாட்டின், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
சென்னையின் ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏ வான இவர் செய்தியாளர்களை நேற்று (10.02.2023) அன்று சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை கொண்டாடும் விதமான ஜல்லிக்கட்டு போட்டி சென்னையில் நடத்தப்படும் என அவர் கூறினார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள படப்பையில், 500 காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டி திமுக சார்பில் நடத்தப்படும் என அவர் அறிவித்தார். தமிழ்நாட்டின் மிகச்சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார். மு.க.ஸ்டாலினின் பெயரிலும் ஒரு காளை களமிறக்கப்படும் என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.
மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு: இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக 'மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு' வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். முதல் இடம் பெறும் காளைக்கு கார் பரிசாகவும், முதல் மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே பலமுறை ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒருங்கிணைத்த ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு சங்கத்தோடு இணைந்து இப்போட்டியை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் எனவும் தா.மோ.அன்பரசன் கூறினார்.
10 ஆயிரம் பேர் வரலாம்: பத்தாயிரம் நபர்கள் போட்டிகளை பார்ப்பதற்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாக கூறிய தா.மோ.அன்பரசன், அவர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என உறுதியளித்தார். ஏற்கனவே, ஒரு மாதத்திற்கு முன்பு இதற்கானப் பணிகள் தொடங்கிவிட்டது எனவும், இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால் தேவையான ஏற்பாடுகளை செய்து முடிப்போம் என அவர் கூறினார்.
சென்ற ஆண்டு, போட்டியை நடத்துவதற்குத் திட்டமிட்டோம். கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவற்றால் நடத்த முடியவில்லை என கூறிய அவர், இந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளை ஒட்டி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு அதிகாரிகள் தான் தேவை; சமூக ஆர்வலர்கள் தேவையில்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி