சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் தமன்னா, மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். இப்படம் விமர்சனரீதியாக தோல்விப் படமாக அமைந்தது. இதனால் ஜெயிலர் படத்தை வெற்றிப் படமாக கொடுத்துவிட வேண்டிய கட்டாயத்தில் நெல்சன் இருக்கிறார். நெல்சனின் வழக்கமான காமெடி கலந்த ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் வெளியான காவாலா பாடலில் தமன்னாவின் குத்தாட்டம் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது.
இதனால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் வெளியான இதன் ட்ரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய சூப்பர் ஸ்டார் குறித்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் படத்துக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சினிமா சிதறல்கள்: சந்திரமுகி 2 பர்ஸ்ட் லுக் முதல் இயக்குநர் சாந்தகுமார் பட அறிவிப்பு வரை கோலிவுட் அப்டேட்கள்!!
இந்த நிலையில் இன்று படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே சென்னை உள்ளிட்ட நகரங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டது. தர்பார், அண்ணாத்த என ரஜினியின் சமீபத்திய படங்கள் சரியாக போகாததால் ஜெயிலர் படத்தின் மூலம் தான் எப்போதுமே சூப்பர் ஸ்டார் தான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினி உள்ளார்.
வெளிநாடுகளிலும் ஜெயிலர் படத்துக்கான முன்பதிவு தொடங்கி அங்கேயும் புக்கிங் நிறைவடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவில் அதிகப்படியான கார்ப்பரேட் புக்கிங் ஜெயிலர் படத்திற்கு அதிகரித்துள்ளது. இது ரஜினி படங்களுக்கே உண்டான தனித்துவமாக பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் படம் வெளியாவதால் இந்த வாரம் வேறு எந்த படமும் வெளியாகவில்லை. அதே நிலை தான் இந்த மாதம் முழுவதும் முக்கியமான படங்கள் எதுவும் வெளியாகாது என்பதால் இம்மாதம் முழுவதும் திரையரங்குகளில் ஜெயிலர் ஆட்சிதான். ஜெயிலர் படத்திற்கு அதிகாலை காட்சிகள் வழங்கப்படவில்லை. எனவே காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்குகிறது.
இதையும் படிங்க: தீ பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசுனாதான் நெருப்பு வரும்.. ரீ-ரிலீஸ் ஆகும் ரஜினியின் மூன்று முகம்!