சென்னை: இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. அதேபோல் தான் நடந்து முடிந்த போட்டியும் சற்று விறுவிறுப்பாகவே இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 6 சிக்சர்களை பறக்க விட்டு 63 பந்துகளில் 86 ரன்களை குவித்தார்.
இந்நிலையில் ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ட்ரெஸ்ஸிங் ரூம் நோக்கி நடக்கும்போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்த சிலர் ரிஸ்வானை நோக்கி 'ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷம் எழுப்பினர். இந்த செயலுக்கு பல தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் #SORRY_PAKISTAN என்ற ஹேஷ்டேக் x தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது X தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கு மாறாக 1999ஆம் ஆண்டு சென்னையில் ஒரு பெருமைக்குரிய செயல் நடந்தது. இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வென்றதற்கு சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று தங்களது வெற்றி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பாகிஸ்தான் அணியை கொண்டாடிய தமிழக ரசிகர்கள்: இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பு உறவில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக கடந்த 1989 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட செல்ல இல்லை. அதேபோல் 1987ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணியும் நீண்ட நாட்களாக இந்தியாவில் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வந்தது.
ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி, கடந்த 1999 ஆம் ஆண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை, இந்திய ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி (standing ovation) பாராட்டு தெரிவித்தனர். ஒரு சிறந்த விளையாட்டு ரசிகர்கள் எப்போதும் சிறந்த அணிக்கு பாராட்டுகளை தெரிவிப்பார்கள். அதில் தமிழக ரசிகர்கள் முதன்மையானவர்கள். இது குறித்து, ஒரு கிரிக்கெட் அசோசியசனில் இருக்கும் ஒருவர் கூறுகையில், "ஒரு ஆரோக்கியமான கிரிக்கெட் ரசனை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 1999ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டி எடுத்துக்காட்டு ஆகும்.
மேலும், கிரிக்கெட் வீரர்களில் இந்து, முஸ்லிம் என வேறுபாடு பார்க்கக் கூடாது. நம் இந்திய அணியிலும் கூட முகமது ஷமி, முகமது சிராஜ் என்ற இரண்டு திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என ரசிகர்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:Australia vs Sri Lanka : முதல் வெற்றி யாருக்கு? ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதல்!