சென்னை: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சார்பில் ஜாக்டோ-ஜியோ என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பினர் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது தொடர் போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ((Jactto Jeo) அமைப்பினர் ஈடுபட்டனர். அப்போது போராட்ட களத்திற்கு நேரடியாக சென்ற தற்போதைய முதலமைச்சரும், அப்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்தால் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால் தற்போது வரை எந்த வித கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதே நேரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசு ஊழியர்கள் லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர் என கூறியது இவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் தனியார் நிறுவனங்கள் மூலம் அரசு பணியில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர் நியமனம் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட அரசாணையை சிலர் எதிர்த்தனர் என சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பகிரங்கமாக தெரிவித்தார்.
காலி பணியிடங்களை நிரப்பாமல் இளைஞர்களின் வேலைவாய்ப்பினை பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட அரசு அணையை நிதி அமைச்சர் மீண்டும் பேசியதற்கு அரசு ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக ஆட்சி அமைந்த பின்னர் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட அளவில் போராட்டத்தை நடத்தியதுடன் 20,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டத்தையும் நடத்தினர். இந்த நிலையில், திருச்சியில் 2ஆம் தேதி நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டத்தில் கு.வெங்கடேசன், இரா.தாஸ் மற்றும் கு. தியாகராஜன் ஆகியோர் கூட்டுத் தலைமை ஏற்று அந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
அதில், "கடந்த 27.3.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதி அமைச்சர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் - பணியாளர்கள் பல லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகிறார்கள் என்று உண்மைக்கு புறம்பாக பேசினார். மேலும் முதலமைச்சர் முன்பே சமூக நீதிக்கு எதிராகவும், இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவினை பறித்து, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தை(TNPSC) முழுமையாக ஒழித்துக் கட்டி, அத்துக்கூலி முறையில் நிரந்தரம் பணியிடங்களை அகற்றி, வெளிமுகமை மூலமாக பணியாளர்களை அமர்த்துவதற்காக மனித வள மேலாண்மை துறையால் அரசாணை 115இல் அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வு வரம்புகளை ரத்து செய்தது சரியில்லை என்று பேசியதற்கு ஜாக்டோ ஜியோ கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
கடந்த இரண்டாண்டுகளில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்கள் வாயிலாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் - பணியாளர்கள் மீது வெறுப்புணர்வோடு பேசியதை தற்போது சட்டமன்றத்திலேயே அரங்கேற்றம் செய்ததற்கு கடும் கண்டனத்தை ஜாக்டோ ஜியோ தெரிவித்துக்கொள்கிறது.
வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் ஜாக்டோ ஜியோ சார்பாக கோரிக்கை சாசனம் வழங்குவது, அதே நாட்களில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், அமைச்சர்கள், அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து கோரிக்கை சாசனம் அளிப்பது, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் - பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப்ரல் 11இல் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தினை நடத்துவது" போன்ற தீர்மானங்களை நிறைவேற்றினர்.
ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் ஜாக்டோ ஜியோ விடுக்கிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.