சென்னை: ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இந்த அமைப்பினரை, அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தார்.
மேலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும் இவர்களின் கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் ஏற்கனவே போராட்டங்களை நடத்தி வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 9ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். பின்னர், முற்றுகை போராட்டத்தை டிசம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மேலும், அதற்கு முன்னர் அரசு தங்களை அழைத்து பேச வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், காந்தி ராஜன், காமராஜ் ஆகியோர் கூறும் பொழுது, “ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோட்டை முற்றுகை போராட்டம் திட்டமிட்டபடி, நாளை சிவானந்தா சாலையில் நடைபெறும்.
இதில், 50,000 பேர் கலந்து கொள்வார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இருந்த அரசு, தங்களின் கோரிக்கை குறித்து அழைத்துக்கூட பேசவில்லை. ஆனால், இந்த அரசு எங்களை அழைத்துப் பேசுகிறது, இதுதான் வித்தியாசம். அரசு வாக்குறுதி கொடுத்திருக்கிறது, அதை செய்வார்கள் என நம்புகிறோம். ஏற்கனவே கோட்டை முற்றுகை போராட்டம் அறிவித்த பொழுது, அமைச்சர்கள் தலைமையில் எங்களை அழைத்துப் பேசினார்கள். ஆனால், எங்களின் கோரிக்கை எதுவும் இதுவரை நிறைவேற்றவில்லை.
அதே நேரத்தில், எந்த கோரிக்கையும் நிறைவேற்ற முடியாது என முதலமைச்சர் தெரிவிக்கவில்லை. 30 மாதங்களாக நாங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளோம். இனி மென்மையான போக்கை ஜாக்டோ ஜியோ கடைபிடிக்காது. முதலமைச்சர் மௌனத்தை கலைந்து, கோரிக்கைகளை அறிவிக்க வேண்டும்.
இனிமேல் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு குழு அமைப்பதை ஏற்க மாட்டோம். அதேபோல், தொடர்ந்து காலம் கடந்து செயலையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். 2026ஆம் ஆண்டு வரை இப்படியே நீட்டிக்கலாம் என்றால், நாங்கள் ஏமாற மாட்டோம். போராட்டத்திற்கு வருபவர்களை காவல்துறை ஆங்காங்கே கைது செய்ய மாட்டார்கள் என நம்புகிறோம்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: எண்ணூர் அமோனியா கசிவு; பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் - தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்