திருச்சியை சேர்ந்த டெனிதா ஜீலியஸ் என்ற பெண், சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் நேர்காணல் சென்றார். இதில் அவர் தேர்வு செய்யப்பட்டு நேற்று முதல் நாள் பணியில் சேர்ந்தார். இவர் இரவுப் பணியில் இருக்கும் பொழுது ஐடி நிறுவனத்தின் 8 வது மாடியில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட தகவலை வைத்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் திருச்சியில் உள்ள பெண்ணின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், இது குறித்து வழக்குபதிவு செய்து, அவர் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது யாரேனும் அவரை தள்ளிவிட்டனரா என்ற பல்வேறு கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே இளம் பெண் ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.