சென்னை: தமிழ்நாடு முழுக்க 40க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று ( மே 26) காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அந்த வகையில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான தாக்குதலில் காயமுற்றதாக 4 வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிட சென்ற வருமான வரித்துறையினர் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்ள சென்றபோது, அவர்களை பணிசெய்ய விடாமல், கரூரில் உள்ள திமுகவினர் தடுத்ததோடு, அவர்கள் சென்ற வாகனத்தை கல் மற்றும் கம்பியால் உடைத்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
9 இடங்களில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனைகள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், அதிகாரிகளும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டனர். இதுகுறித்து புகார் அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர்கள் புகார் அளிக்க சென்றுவிட்டு, பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் திரும்பிவந்து சோதனை நடத்தியதாக குறிப்பிட்டு உள்ளார். இந்த இடைப்பட்ட நேரத்தில் அசோக் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் இருந்த முக்கிய ஆவணங்கள், சான்று பொருட்கள் ஆகியவற்றை திமுகவினர் எடுத்துச் சென்றிருக்கலாம் என குறிப்பிட்டு உள்ளார்.
எனவே இதுகுறித்தும், வருமான வரித் துறை அதிகாரிகளை தாக்கியது குறித்தும் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் வகையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வழக்கறிஞர் ராமச்சந்திரன் கோரிக்கை வைத்து உள்ளார்.
தாங்கள் தாக்கப்பட்டது குறித்து மாவட்ட காவல்துறையினரிடம் புகார் அளித்தாலும், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவர் சார்ந்துள்ள கட்சி தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயக்கம் காட்டலாம் என்பதாலும், ஒத்துழைக்க மாட்டர்கள் என்பதாலும், இந்த விவகாரத்தை, சிபிஐ விசாரணை அமைப்பு விசாரிப்பதே சிறந்ததாக இருக்கும் என மனுவில் தெரிவித்து உள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதனிடம் மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதற்கு அவர், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதா என்பது குறித்து விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் முடிவு செய்வார்கள் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "ஐடி ஆளுங்களையே தாக்குவீங்களா?" - மத்திய அரசுக்கு ஆலோசனை கொடுக்கும் ஈபிஎஸ்..!