சென்னை: டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'மோனிஷா என் மோனலிசா' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். இவர் குஷி, சாக்லேட், மிடில் கிளாஸ் மாதவன், மலபார் போலீஸ் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களிலும் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் சென்னை அண்ணாநகரில் ஹெச் பிளாக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது சகோதரர் குடும்பத்துடன் சேர்ந்து வசித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்து வருவதாகக் கூறி, காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட 19 வயதான இளம்பெண் ஒருவர், மும்தாஜ் வீட்டில் தான் துன்புறுத்தப்படுவதாகவும், தனது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்குமாறும் உதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இவர் வீட்டில் தனது 17 வயது சகோதரியும் சட்டவிரோதமாக கொடுமைப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார். தனக்கு 13 வயதாக இருக்கும்பொழுது நடிகை மும்தாஜ் வீட்டிற்கு வேலைக்காக அனுப்பப்பட்டதாக அப்பெண் கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணாநகர் போலீசாரிடம் இளம்பெண் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் நேரில் சென்று விசாரித்ததாகவும், அந்தப் பெண் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும், அவரும், 17 வயதான இளைய சகோதரியும் மும்தாஜ் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சிறுமிகளின் தாயாரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ஆறு வருடங்களுக்கு முன்பு இருவரையும் மும்தாஜ் வீட்டில் வேலைக்காக கொண்டு சேர்த்ததை ஒப்புக்கொண்டுள்ளார். துன்புறுத்துவதாக அளித்தப் புகாரின் அடிப்படையில் வீட்டு பணிப் பெண்களாக இருந்த இளம்பெண்ணையும், சிறுமியையும் மீட்டு அரசுக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் குழந்தைகள் நலக் குழு மற்றும் தொழிலாளர் நலத் துறை சார்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாகவும் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், சிறுமிகள் சட்டவிரோதமாக வேலைக்காக அழைத்துவரப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். குறிப்பாக, சிறுமிகளின் பெற்றோர்களை அழைத்து விசாரித்ததில் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை எனவும், நான்கு சிறுமிகள் வேலைக்காக கொண்டுவரப்பட்டு மும்பையில் நடிகை மும்தாஜின் தாய் வீட்டில் இரண்டு பேரும் சென்னை அண்ணா நகரில் நடிகை மும்தாஜ் வீட்டில் இரண்டு பேரும் தங்க வைக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்றபோது மூன்று முறை எடுத்துரைக்கப்பட்டதாகவும், குழந்தைகள் நலக் குழு மற்றும் சமூக ஆர்வலர் மூலமாகவும், தொழிலாளர் நலத்துறை சார்பில் அறிக்கையாகவும் புகார் அளிக்கப்பட்டும் சென்னை அண்ணா நகர் காவல் துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், வருவாய்த்துறை அதிகாரிகளும் ஏற்கனவே உரிய விசாரணை நடத்துமாறு கூறப்பட்டிருந்தும், இந்த விவகாரம் தொடர்பாக 14 மாதங்கள் ஆகியுள்ளதால் வருவாய்த் துறை அதிகாரிகள் மீண்டும் புகார் அளிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கூறப்படுவதாக தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை காவல்துறை தரப்பில் கேட்கப்பட்ட போது நடிகை மும்தாஜிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டதாகவும், மேலும், குழந்தைகளின் பெற்றோர்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு அவர்களது ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்த பின், உத்தரப்பிரதேச காவல்துறை உதவியோடு தீவிரமாக விசாரணை நடத்தி சிறுமிகளை ஒப்படைத்ததாகவும் கூறியுள்ளனர்.
சென்னை காவல்துறை தரப்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில், தொழிலாளர் துறை அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழு மற்றும் வருவாய்த் துறை தரப்பில் நடிகை மும்தாஜ் வீட்டில் சிறுமிகள் பணியமர்த்தப்பட்டது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:என்ஐஏ சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் - எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முபாரக்