சென்னை: எல்இடி விளக்குகளை இயக்குவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மின்முனைகளுக்கு இடையே கடல் நீரை எலக்ட்ரோ லைட்டாகப் பயன்படுத்தும் நாட்டின் முதல் உப்பு நீர் விளக்கை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் (தனிப்பொறுப்புகள்), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் இன்று சென்னையில் அறிமுகப்படுத்தினார்.
கடல்சார் ஆராய்ச்சிக்காக சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்பக் கழகத்தால் இயக்கப்பட்டு, பயன்படுத்தப்படும் சாகர் அன்வேஷிகா என்ற கடல்சார் ஆராய்ச்சி கப்பலை நேரில் சென்று பார்த்த அவர் “ரோஷினி” என்று பெயரிடப்பட்ட இந்த விளக்கை அறிமுகப்படுத்தினார். இந்த உப்பு நீர் விளக்கு, ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும், குறிப்பாக இந்தியாவின் 7,500 கிலோமீட்டர் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மீனவ சமூகத்தினருக்கு பயன்படும்.
நாடு முழுவதும் எல்இடி விளக்குகளை விநியோகிப்பதற்காக கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமர் மோடியின் உஜாலா திட்டத்திற்கும் இந்த விளக்கு உத்வேகம் அளிக்கும். எரிசக்தி பாதுகாப்பு, எரிசக்தி அணுகல் மற்றும் தேசிய பொருளாதாரத்தின் கரியமில தடங்களைக் குறைப்பதற்காக எரிசக்தி அமைச்சகத்தின் சூரியசக்தி ஆய்வு விளக்குகள் போன்ற திட்டங்களுடன் ரோஷினி விளக்குகளும் துடிப்பான புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி திட்டத்திற்கான உந்து சக்தியாக விளங்கும்.
இந்த விளக்கு கடல் தண்ணீரில் மட்டுமல்லாமல் எந்த ஒரு உப்பு தண்ணீர் அல்லது உப்பு கலந்த சாதாரண தண்ணீரிலும் இயங்கும் என்பதால் குறைந்த செலவு மற்றும் எளிதாக இயக்கக்கூடிய வகையில் கடல் தண்ணீர் இல்லாத இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்தத் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளிலும், பேரிடர் காலங்களிலும் உதவும் வகையில் இதன் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளனர். இல்லந்தோறும் மூவர்ணக் கொடியேற்றும் இயக்கத்தை நீட்டித்து, கப்பல்தோறும் மூவர்ணக் கொடி என்ற முயற்சியில் அமைச்சர் ஜிதேந்திர சிங், கப்பலில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் போல அனைத்து நடிகர்களும் தேசபக்தி கொண்டிருக்க வேண்டும் எனக்கூறிய மத்திய அமைச்சர்