சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்துசாலைகளும்; 5,270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்பொழுது, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிறசேவைத்துறைகளான மின்சாரத்துறை, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் புதிய கேபிள்கள் பதிக்கும் பணி உட்பட பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 23 இடங்களில் 9.93 கி.மீ. நீளத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் உட்பட பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 33 இடங்களில் 18.9 கி.மீ. நீளத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
பணிகள் முடிவுற்ற இவ்விடங்களில் சாலைகளை சீரமைக்கும் பணி ரூ.16.02 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மேற்குறிப்பிட்ட 2 சேவைத்துறைகளின் சார்பில் மொத்தம் 28.83 கி.மீ. நீளத்திற்குப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 14.73 கி.மீ. நீளத்திற்குச் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நீளத்திற்குச் சாலைகளை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்தச் சீரமைப்பு பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிவுற்றபின், சம்பந்தப்பட்ட சாலைகள் முறையாக சீர் செய்ய மாநகராட்சியின் சார்பில் தொழில்நுட்ப வழிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டு அதனடிப்படையில் சாலை சீரமைப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீரமைப்புப் பணிகள் முடிவுற்ற சாலைகளை சீரமைக்கும் பொழுது, தேவையானஅளவு ஆழத்திற்கு தோண்டி எடுத்து, ஜல்லி கலவை (Wet mixed Macadam), M40 சிமென்ட் கான்கிரீட் கலவை கொண்டு சரியான முறையில் நிரப்பப்பட்டு சீர் செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: உணவுப்பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறிக்கமுயன்ற நபர்