கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, தற்போது ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மீட்பு விமானங்கள் மூலம் தொடர்ந்து இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், துபாயிலிருந்து 172 பேர், அமெரிக்காவின் சிக்காகோ நகரிலிருந்து 63 பேர், குவைத்திலிருந்து 173 பேர் என மொத்தம் 408 இந்தியா்களுடன் மூன்று சிறப்பு மீட்பு விமானங்கள் இன்று (ஆக. 20) காலை சென்னை வந்தடைந்தன.

அதில் வந்த பயணிகள் அனைவருக்கும் மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 14 நாள்களுக்கு அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் அரசின் இலவச தங்குமிடங்களுக்கு 267 பேரும், கட்டணம் செலுத்தி தங்கும் இடங்களான ஹோட்டல்களுக்கு 139 பேரும், இரண்டு போ் அரசின் சிறப்பு அனுமதி பெற்று வீட்டுத் தனிமைக்கும் அனுப்பப்பட்டனா்.
அதேபோல், ஓமன் நாட்டின் மஸ்கட்டிலிருந்து 162 பேர் சிறப்பு தனி விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தடைந்தனர். இவர்கள் அனைவரும் ஓமன் நாட்டில் தனியாா் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவா்கள் ஆவர். அந்த நிறுவனமே அரசின் அனுமதியுடன் அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.

எனவே இவா்களுக்கு சென்னை விமான நிலையத்தில் இலவச மருத்துவப் பரிசோதனை, அரசின் இலவச தங்குமிடங்கள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படவில்லை. இதையடுத்து அனைவரும் சென்னை நகர ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டனா். அங்கு சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை கண்காணிப்பில் தனியாா் மருத்துவக் குழுவினா் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...விமான கட்டணங்களை குறைக்க பயணிகள் கோரிக்கை!