சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 7வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தியா - மலேசியா இடையேயான இறுதிப் போட்டியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூரும் கலந்து கொண்டார்.
இறுதிப்போட்டி என்பதால் இரண்டு அணிகளும் தொடக்கம் முதலே பரபரப்பாக விளையாடினர். ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் இந்திய வீரர் ஜக்ராஜ் சிங், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால், இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இதனையடுத்து, 14வது நிமிடத்தில் மலேசிய வீரர் அஸ்ராய் அபு கமல் கோல் அடிக்க, முதல் கால் பகுதியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமமாக இருந்தது.
தொடர்ந்து மலேசியா அணி அடுத்தடுத்து கோல் அடிக்க இந்திய அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மலேசிய அணியின் வீரர் ரஹீம் ராஸீ 18வது நிமிடத்திலும், அமினுதீன் 28வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் 2வது கால் பகுதியின் முடிவில் 3 - 1 என்ற கோல் கணக்கில் மலேசியா முன்னிலை வகித்தது.
அதன் பிறகு சுதாரித்து கொண்ட இந்திய அணியினர் ஆக்கோரஷமாக விளையாடினர். 45வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டோக் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே குர்ஜந்த் சிங் கோல் அடிக்க, 3வது கால் பகுதியின் முடிவில் இரண்டு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமமாக இருந்தது.
கடைசி நேரத்தில் இரு அணிகளும் கடுமையாக மோத இந்திய அணியின் வீரர் ஆகாஷ்தீப் சிங் 56வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெறச் செய்தார். மீதம் இருந்த நேரத்தில் மலேசியா அணியை கோல் அடிக்க விடாமல் தடுத்த இந்திய அணி, இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது 4வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது, இந்தியா.
முன்னதாக நடந்த புள்ளிப் பட்டியலின் 3வது இடத்திற்கான ஆட்டத்தில் ஜப்பான் - தென்கொரியா அணிகள் மோதின. இதில் 5-3 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி தென்கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வெற்றிக்கான கோப்பையை வழங்கினர்.
இந்த வெற்றியின் மூலம் ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது 4வது பட்டத்தை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “ஆசிய சாம்பியன்ஷிப்பில் அற்புதமான வெற்றியை பதிவு செய்த ஆடவர் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இது இந்தியாவின் 4வது வெற்றியாகும். இது நமது வீரர்களின் அயராத அர்ப்பணிப்பையும், கடுமையான பயிற்சியையும் வெளிப்படுத்துகிறது. அவர்களது அசாதாரணமான செயல்பாடு நாடு முழுவதும் பெருமை கொள்ள வைத்துள்ளது. நமது வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Ind Vs WI : வெற்றியை நோக்கி வீறுநடைபோடும் இந்திய அணி!