சென்னை: இந்திய பெருங்கடலினுள் கன்னியாகுமரியிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீவுகளின் தொகுப்பு தான் மாலத்தீவு. இந்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியின் முகமது முய்சு வெற்றி பெற்று அதிபராக பதவியேற்க உள்ளார். பதவியேற்கும் முன்னதாகவே அதிரடி அறிவிப்புகளை வெளியிடத்துவங்கினார் முய்சு.
மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கூட இருக்கக் கூடாது, வெளியேற வேண்டும் என்ற உத்தரவு தான் எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பானது. வெளிப்படையாக மாலத்தீவு நாட்டின் தனித்துவம் குறித்து நீட்டி முழக்கினாலும், சீன ஆதரவு நிலைப்பாடு தான் இந்த தேசப்பற்றுக்கு காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
புவிசார் அரசியலில் முக்கிய இடத்திலிருக்கும் மாலத்தீவு, இந்தியா , ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எண்ணெய் கப்பல்கள் பயணிக்கும் வழித்தடத்தின் அருகாமையில் இருப்பது, இத்தீவுக்கூட்டத்திற்கான முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது. தற்போதைய நிலவரப்படி சீனாவிடம் மில்லியன் கணக்கில் கடன் வாங்கிக் குவித்திருக்கிறது மாலத்தீவு. அந்நாட்டின் மொத்த கடனில் 70 சதவீதம் சீனாவிடம் வாங்கியதுதான். மாலத்தீவின் அவசியத்தை உணர்ந்துள்ள இந்தியாவும், உதவிகளை வாரி வழங்கிக் கொண்டுதான் உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவால் மாலத்தீவில் முன்னெடுக்கப்பட்ட 47 வகையான வளர்ச்சித் திட்டங்களில் 7 பணிகள் நிறைவுற்று திறப்பு விழா கண்டுள்ளன.
இது தவிர எக்சிம் வங்கியின் 800 மில்லியன் டாலர் கடன் உதவியுடன் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு திட்டங்கள் 2019ல் கையெழுத்தாகின. இது தவிர முன்னாள் அதிபர் இப்ராகிம் முகமது சோலி பதவிக்காலத்தில், 100 மில்லியன் டாலருக்கான கடனுதவு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த திட்டங்கள் அனைத்துமே முடிவு தெரியாமல் அந்தரத்தில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
நாடாளுமன்ற ஜனநாயகம் இல்லாத அதிபர் ஆட்சி நடைபெறும் மாலத்தீவில், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு உடைய முகமது முய்சுவின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்ததார். இருந்த போதிலும் முய்சுவின் முரணான செயல்பாடுகள், இந்திய ராணுவத்தை வெளியேற்றும் முனைப்பு உள்ளிட்டவை விமர்சனத்திற்குள்ளாயின. இந்நிலையில் வரலாறு காணாத வகையில் தமிழ்நாடு மீனவர்கள் மாலத் தீவில் கைதாகியிருப்பது புருவங்களை உயரச் செய்துள்ளது. இலங்கையில் நிகழ்வதைப் போன்று மாலத்தீவிலும் மீனவர் கைது தொடர்கதையாகாமல் தடுக்க வேண்டுமென்பது மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: மாலத்தீவில் தமிழ்நாடு மீனவர்கள் கைது... காரணம் என்ன தெரியுமா? அப்போ இலங்கை.. இனி மாலத்தீவும்..