சென்னை: நாட்டின் 77-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டியது. பல்வேறு மாநிலங்களின் தலைநகரிலும், அம்மாநிலத்தின் முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.
சுதந்திர தினத்தையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி இருந்தார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளிலும், தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரிப்பன் மாளிகையில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். இதன் பிறகு, மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்க விட்டார். அதனைத் தொடர்ந்து, தேசிய மாணவர் படையினர், சாரண சாரணியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சியில் அதிக சொத்துவரி செலுத்திய 3 நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும், முறையாக உரிய காலக்கெடுவிற்குள் சொத்துவரி செலுத்திய 3 சொத்து உரிமையாளர்களுக்கும் பாராட்டுக் கடிதங்களை (Letter of Appreciation) மேயர் பிரியா வழங்கி பாராட்டினார்.
இதையும் படிங்க: சுதந்திர தினம் 2023: முதலமைச்சர் ஸ்டாலின் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்
தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய 128 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினார். மேலும், தேசிய மாணவர் படை, சாரண சாரணியர்கள் மற்றும் கலை நிகழச்சிகளின் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மேயர் பிரியா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர்கள் சங்கர்லால் குமாவத், லலிதா, இணை ஆணையாளர் (பணிகள்) சமீரன், வட்டார துணை ஆணையாளர்கள் ஷேக் அப்துல் ரஹ்மான், சிவகுரு பிரபாகரன், அமித், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் இராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர்கள் தனசேகரன், மண்டல குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என பலரும் பங்கேற்றனர்.