சென்னை: தியாகராய நகர், பசுல்லா சாலையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மயிலாப்பூர், மந்தைவெளி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள், திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனை நடைபெறும் இடங்களில், துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது, இந்த சோதனைகள் குறித்த முழு விவரங்கள் வெளியாகாத நிலையில், சோதனைக்குப் பிறகு முழு விவரங்கள் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த வாரம் அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று நாட்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.
அச்சோதனையின்போது, சென்னை, கோவை, ஈரோடு, விருதுநகர், சேலம், நாமக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஒப்பந்தங்களை எடுக்கும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகங்கள், நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடுகள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு எதிரான வழக்கு; விசாரணைக்கு எடுக்கும் உயர் நீதிமன்றம்!