கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 140 நாட்களைத் தாண்டியுள்ளது. மத்திய, மாநில அரசு பல்வேறு தளர்வுகளைத் தொடர்ந்து அறிவித்து வந்தாலும், பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்ய இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று பலர் கருத்துகள் தெரிவிக்கின்றனர்.
இந்த கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வீடு விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது என்றே கூறவேண்டும். சிலர் வீட்டை கட்டிவிட்டு விற்க முடியாமலும், சிலர் வீட்டை வாங்க முடியாமலும், வீட்டு கட்டுமானத்தை முழுவதும் முடிக்கமுடியாமலும் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தற்போது கரோனா தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், தளர்வுகளுடன் உள்ள ஊரடங்கில் வீடு விற்பனை மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என கட்டுமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
வீட்டு கட்டுமானப் பணிகளைப் பொறுத்தவரை புலம்பெயர்ந்த தொழிலாளிகள் முழுவதும் இல்லாததால் முழு வீச்சில் நடைபெறுவதில்லை. 90 % கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது புலம்பெயர்ந்த தொழிலாளிகள் தான் என்றும்; அதை சமாளிப்பது பெரிய சவாலாக இருந்தது எனவும் தெரிவிக்கிறார், தமிழ்நாடு கிரடாய் (CREDAI - Confederation of Real Estate Developers’ Association of India) தலைவர் ஸ்ரீதரன்.
இது குறித்து பேசிய அவர், 'கரோனாவிற்கு முன்பு வீடு விற்பனை நன்றாக இருந்தது. அப்போது வீடு விற்பனை சந்தையில் நல்ல முன்னேற்றம் தொடர்ந்து காணப்பட்டது. ஆனால், கரோனா பாதிப்பால் முழு ஊரடங்கு நேரத்தில் பொருளாதாரம் முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதனால் வீடு விற்பனைத் தொடங்கி கட்டுமானப் பணிகள் அனைத்தும் தடைப்பட்டது. கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர்களில் 90 விழுக்காடு பேர் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் தான். அவர்கள் கரோனா காலத்தில், தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுள்ளதால் கட்டுமானப் பணிகள் தொய்வடைந்தது. தற்போது மெதுவாக அவர்கள் வரத் தொடங்கியுள்ளனர். அதனால், தற்போது ஓரளவுப் பணிகள் நடைபெறுகிறது.
இந்த கரோனா காலத்தில் பலர் சொந்த வீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். தற்போது கட்டுமானம் நிறைவடைந்துள்ள வீட்டிற்கு அதிக அளவு தேவை வந்துள்ளது. குறிப்பாக, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இங்கு வீடு வாங்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏதேனும் பிரச்னை என்றால், வந்து தங்குவதற்கு வீடு தேவை என்பதை உணர்ந்த அவர்கள், தற்போது அதிக அளவில் வீடுகளை வாங்கத் தொடங்கியுள்ளனர். கடந்த ஒரு மாதமாக வீடு விற்பனையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனால், இன்னும் இரண்டு மாதங்களில் பழைய நிலை வரும் என்று நாங்கள் நம்புகின்றோம்' எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'கரோனாவால் வீடு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், குறைவாக வீட்டின் விலை இருக்கும் எனக் கூறுகின்றனர். ஆனால், அப்படி ஏதும் இல்லை. வீட்டின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் நிலத்தின் விலையைப் பொறுத்தே வீட்டின் விலை இருக்கும். அதில் மாற்றம் இல்லாததனால் வீட்டின் விலையில் தற்போது வரை ஏற்றமும் இல்லை, குறைவும் இல்லை. குறிப்பாக, சென்னையில் வீடு விற்பனை நல்ல முன்னேற்றத்தைக் காணத் தொடங்கியுள்ளது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆளும் கட்சி மோசடி செய்துள்ளது - பார்த்திபன் எம்பி