சென்னை: 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் தொடக்க விழாவினை வேலூர் மண்டலத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி மற்றும் 2 ஆகிய தேதிகளில் தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். கள ஆய்வு நடத்திய நிலையில் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்களின் செயல்பாடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்தியளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வளர்மதி ராணிப்பேட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே ராணிப்பேட்டை ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் ஆட்சியராக பணியாற்றி வந்த அமர் குஷ்வாஹா சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சரின் கள ஆய்வின் தொடக்கத்திலேயே இரண்டு ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது தமிழ்நாடு முழுவதும் உள்ள இதர ஆட்சியர்கள் மத்தியில், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி உத்தரவால், தற்போது வரை துறையை கவனிக்காத, மாவட்ட ஆட்சியாளர்கள் இனிமேல் தங்களின் வேலையை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்