ஹைதராபாத் : ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை, முன்பதிவில்லாத ரயில்கள் இயக்கம், தடுப்பூசி இலக்கு, கர்நாடகாவில் பள்ளிகள் திறப்பு, ஓசூரில் மக்களை தேடி மருத்துவம், அஞ்சலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை தொடக்கம் என இன்றைய முக்கிய நிகழ்வுகளின் செய்தி சுருக்கம் இதோ.
- பள்ளிகள் திறப்பு- மு.க. ஸ்டாலின் ஆலோசனை: தமிழ்நாட்டில் செப்.1ஆம் தேதி பள்ளிகளை திறப்பது குறித்து மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை (ஆக.30) ஆலோசனை நடத்துகிறார்.
- முன்பதிவில்லாத ரயில்கள் இயக்கம்: திருச்சியில் முன்பதிவில்லாத 5 ரயில்கள் இன்று முதல் மீண்டும் சேவையை தொடங்குகின்றன. இது ரயில் பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கேரளத்தில் இரவு ஊரடங்கு: கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து 30 ஆயிரத்தை கடந்துவருகிறது. நாட்டின் மொத்த பாதிப்பில் 70 விழுக்காடு பாதிப்புகள் கேரளத்தில் நிகழ்கின்றன. இதையடுத்து, தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இது ஆக.30 முதல் அமலுக்கு வருகிறது. இதனை அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.
- சேலத்தில் தடுப்பூசி இலக்கு: சேலம் மாவட்டத்தில் கோவிஷீல்ட் முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவேக்ஸின் இரண்டாம் தவணை என 86 ஆயிரத்து 590 பேருக்கு தடுப்பூசி போட திங்கள்கிழமை (ஆக.30) இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஓசூரில் மக்களை தேடி மருத்துவம்: தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஆக.30) ஓசூர் செல்கிறார். அங்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.
- கர்நாடகாவில் பள்ளிகள் திறப்பு: கர்நாடக மாநிலத்தில் 1-8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்படுகின்றன. கோவிட் பரவல் ஒருபுறம் இருந்தாலும் பள்ளி மாணவ- மாணவியரின் மன அழுத்தத்தை குறைக்க அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
- அஞ்சலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை: அஞ்சலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. இந்தத் திட்டம் தஞ்சாவூர் உள்பட சில மாவட்டங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
- ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி: நாடு முழுக்க இன்று (ஆக.30) ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு இடங்களில் உறியடி உள்ளிட்ட திருவிழாக்கள் இன்று நடத்தப்படும்.
இதையும் படிங்க : இன்றைய ராசி பலன் - ஆகஸ்ட் 30