சென்னை: இது தொடர்பாக பத்திரிக்கை தகவல் பணியகம் (Press Information Bureau) தமிழ்நாடு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொலைத்தொடர்புத் துறை, தமிழ்நாடு எல்எஸ்ஏ, மத்திய உளவுத்துறை, தமிழ்நாடு காவல் துறை, ஏர்டெல் தமிழ்நாடு ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவினர் மத்திய உளவுத்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சென்னை கிண்டியில் சந்தேகத்திற்கு உரிய இடத்தில் சோதனை செய்து, அங்கு சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தொலைத்தொடர்பு அமைப்பைக் கண்டுபிடித்து உள்ளனர்.
உரிமம் பெற்ற சர்வதேச நீண்ட தூர ஆபரேட்டர்கள் (ஐ.எல்.டி.ஓ) நெட்வொர்க்கைத் தவிர்த்து, சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்ற சந்தாதாரர் அடையாள தொகுதி சிம் பாக்ஸ் மற்றும் சிம் அடிப்படையிலான வயர்லெஸ் இணைய ரூட்டர், எஃப்.டி.டி.எச் ரூட்டர் ஆகியவற்றைக் கொண்டு சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டது என கண்டறியப்பட்டது.
இத்தகைய சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும், அரசு கருவூலத்திற்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில், சென்னை கிண்டியில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத தொலைபேசி அமைப்பின் உபகரணங்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிம் கேட்வேக்களின் எண்ணிக்கையாக, மேக் - டின்ஸ்டார், திறன்- 32/16 சிம் போர்ட்கள் - 4,250 பயன்படுத்தப்பட்ட ஏர்டெல் சிம்கள், எஃப்.டிடி.எச் ரூட்டர் - 1, வைஃபை சிம் ரூட்டர் - 1 மேலும் பல சிம் கார்டுகள் மற்றும் யுபிஎஸ் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இது போன்ற சட்ட விரோத செயல்களைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏர்டெல் தமிழ்நாடு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் உள்ளூர் சிஎல்ஐ அல்லது தங்கள் தொலைபேசியில் எந்த எண்ணும் காட்டப்படாத சர்வதேச அழைப்பைப் பெறுவது குறித்து 1800 110 420 அல்லது 1963 என்ற கட்டணம் இல்லா எண்ணில் பொதுமக்கள் தொலைத்தொடர்புத் துறையின் அழைப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: அரசு போக்குவரத்து கழக ஊழியருக்கு 383 ஆண்டு சிறை - காரணம் என்ன?