சென்னை: கோடம்பாக்கத்தைச்சேர்ந்த சக்தியின் மகள் சிந்து. இவர் கடந்த 2020இல் டிசம்பர் மாதம் தோழி வீட்டின் மூன்றாவது மாடியில் சிந்து விளையாடியபோது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில், அவருடைய இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன.
தாடையின் ஒரு பகுதி முழுதும் சேதமைடைந்தது. பின்னர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 10க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்பு சிந்து இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே உள்ளார்.
இந்நிலையில், ஆசிரியர்கள், தோழியர் உதவியுடன், வீட்டில் இருந்தபடியே படித்து, சமீபத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். இதுகுறித்து வெளியான செய்தியைத் தொடர்ந்து, மாணவி சிந்துவின் சிகிச்சைக்கு உதவுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, 19ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மாணவி சிந்து அனுமதிக்கப்பட்டார்.
மாணவிக்கு, அரசு மருத்துவமனைகளில் நிபுணத்துவம் வாய்ந்த எலும்பியல், பல் உள்ளிட்ட பல்துறை டாக்டர்கள் பரிசோதனை செய்து, சிகிச்சையைத் தொடங்கி உள்ளனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, ’இரண்டு ஆண்டுகளாக உரிய சிகிச்சை பெறாத நிலையில் மாணவி சிந்து இருந்தார். இங்கு அனுமதிக்கப்பட்டபின் பல்துறை டாக்டர்கள் அவருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து தெரிவித்துள்ளனர்.
அதன்படி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, மருத்துவ உபகரணங்கள் உதவியுடன், சிந்துவை நடக்க வைப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் எவ்வித உதவியும் இன்றி, தானாக சிந்து நடக்க உள்ளார். மேலும், கிருமித்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டுள்ளன’ இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்கள்.
இதையும் படிங்க:முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மாணவி சிந்து!