சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கையில், 'கிண்டியில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த 19 வயது மாணவி பாத்திமா கடந்த வாரம் தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்கொலை செய்யப்பட்ட மாணவி பாத்திமாவின் உடல் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை உறுதி செய்கிறது. மாணவி பாத்திமா எழுதியிருக்கிற குறிப்பு மற்றும் செல்பேசியில் பதிவு செய்யப்பட்டிருக்கிற கருத்துகள் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளன.
தனது சாவுக்கு ஒரு பேராசிரியர் கொடுத்த மனஉளைச்சல் தான் காரணம் என்பதை அவர் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து காவல் துறையினர் உரிய பேராசிரியரை விசாரிக்காமல் இருந்தது ஏன்? இதுகுறித்து புலன் விசாரணை ஏன் செய்யப்படவில்லை?
எனவே, தற்கொலை செய்து கொண்ட ஐ.ஐ.டி. மாணவி சாவில் மர்மம் இருப்பதற்கான பல ஆதாரங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இதை மாணவியின் பெற்றோரும் உறுதி செய்துள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறை மாணவியின் உயிரிழப்பு குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும்' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: '2014 ஆம் தேர்தல் அறிக்கையை தான் பாஜக தற்போது வெளியிட்டுள்ளது'-ஜவாஹிருல்லா