சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் 'modi @20 : dreams meet delivery' எனும் பிரதமர் மோடி குறித்த நூலின் அறிமுக விழாவில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்வுடன் இணைந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "கடலூரில் நான் பேசியது குறித்து திமுக ஐடி விங் மூலம் வழக்கம்போல சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது. ஒரு கட்சியை சார்ந்த 2 ஊடக நண்பர்கள் காரிய கர்த்தா உறுப்பினருடன் நான் பேச முடியாதபடி நடந்து கொண்டனர். நான் பத்திரையாளர்களை சந்திக்கவில்லை என்று ஏற்கனவே அங்கு கூறியிருந்தேன். திமுக ஐடி விங்கில் இருக்கும் வேலை இல்லாதவர்கள் ஒரு பகுதியை மட்டும் பரப்பி வருகின்றனர்.
கோவை பந்த் தொடர்பாக நான் அழைப்பு விடுக்கவில்லை என்பதை நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது. பாஜக தலைமை பந்த் நடத்த வேண்டும் என யாரையும் நிர்பந்திக்க மாட்டோம். கோவை மக்களின் உணர்வை பொறுத்து அங்கு பந்த் நடைபெறும். கோவை மாவட்ட பாஜகவினர் மக்களின் ஆதரவை பெற்று அங்கு பந்த நடத்துவது என்பது அவர்களது விருப்பம்.
என்ஐஏ என்பது professional agency, எல்லை கடந்த தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் அமைப்பு. நேற்று ஆளுநர் கோவையில் பேசும்போது குற்றவாளிகளை கைது செய்ததற்காக அடிமட்ட காவல்துறையின் செயல்பாட்டை பாராட்டினார். ஆனால் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்கள்தான் தாமதம் செய்துள்ளனர்.
கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு குறித்து 18ஆம் தேதியே மத்திய உள்துறை மாநில அரசுக்கு specifice ஆக alert கொடுத்தனர். ஆனால் 21ஆம் தேதி மாலைதான் மாநில உளவுத்துறை மத்திய உளவு துறை அறிக்கையை எடுத்து, சில விசயங்களை அதனுடன் இணைத்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. 4 நாட்கள் தாமதம் செய்துள்ளனர்.
டிஜிபியும், கோவை மாநகர காவல் கண்காணிப்பாளரும் மத்திய உளவுத்துறையிடமிருந்து அறிக்கை வரவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் மாநில உளவுத்துறைமூலம் 21ஆம் தேதி அனுப்பப்பட்ட கடிதம் என்னிடம் இருக்கிறது. official secret act எனும் சட்டம் காரணமாக அதை இப்போது என்னால் வெளியிட முடியவில்லை. மாநில அரசு சம்மன் அனுப்பினால் வெளியிட தயாராக இருக்கிறேன்.
ஊடகங்களில் தொடர்ந்து செய்தி வெளியானதால் மாநில அரசு வேறு வழியின்றி கோவை கார் வெடிப்பு குறித்து nia விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது. திமுக மேடையில் பாஜகவில் உள்ள4 தலைவர்கள் குறித்து பேசியது தவறு. நட்டா இதுதொடர்பாக என்னை தொடர்பு கொண்டு பேசினார்.
குஷ்பு, கௌதமி, காயத்ரி ரகுராம், நமீதாவிடம் நான் தொடர்பு கொண்டு பேசினேன். திமுகவினருக்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று கூறினேன். கட்சி அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினேன். கொச்சைப்படுத்துவதை தாண்டியும் சில வார்த்தைகளை அந்த மேடையில் பேசியுள்ளனர். கனிமொழி அப்பேச்சை கண்டித்ததை நான் வரவேற்கிறேன்.
யாரோ செய்த தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்பது மட்டும் போதாது. எனவே பாஜக மகளிரணி சார்பில் திமுகவை கண்டித்து போராட்டம் நடைபெறும். 400க்கும் மேற்பட்ட இமெயில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஊடகங்களைப் போலவே பெண்கள் அரசியலுக்கு வருவதும் மனதளவில் கடினமானது.
சாராய வியாபாரியான செந்தில் பாலாஜி உட்பட யாராக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும். காவல்துறையை உள்ளடக்கிய உள்துறை மத்திய அரசுக்கு செல்ல வேண்டும் என்று எப்போதும் நாங்கள் சொல்ல மாட்டோம். ஏனென்றால் மாநில அரசின் அதிகாரம் குறைந்துவிடும். மாநிலப் பட்டியலில் பிரதமர் எந்த இடையூறும் செய்யவில்லை.
சில அமைச்சர்கள் கூறியதைப்போன்று என்.ஐ.ஏ என்னை விசாரித்தால் என்னிடம் இருக்கும் ஆதாரங்களை சமர்ப்பிப்பேன். எந்த அதிகாரி எனக்கு அவற்றை அனுப்பியது என்பதையும் கூறுவேன். காரில் வெடித்தது சிலிண்டர்தான் என்றே தொடர்ந்து கூறியதன் காரணம் என்ன அதன் மூலம் தெரியவரும். எனவே பல உயரதிகாரிகளின் பதவிகள் பறிபோகக் கூடிய ஆபத்து இருக்கிறது. என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வெளியிட்டால் பூதம் வெடிக்க ஆரம்பிங்கும்.
தைரியமிருந்தால் மாநில அரசு எனக்கு சம்மன் அனுப்பட்டும். நான் ஆதாரங்களை சமர்ப்பிக்கிறேன். ஆனால் பின்னர் பொதுவெளியிலும் அவற்றை வெளியிடுவேன். 18ஆம் தேதி மத்திய உளவுத்துறை அனுப்பிய தகவல் பின்னர் எனக்கு கிடைத்தது. அதை பார்த்தவுடன் என் ரத்தம் கொதித்தது. மற்ற அரசியல்வாதிகளிடம் விளையாடுவது போல் என்னிடம் விளையாட கூடாது.
முதலமைச்சருக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. இசுலாமியர்களுக்கு எதிராக நான் எப்போதும் பேசியதில்லை. நான் பேசிவதை கேட்டு இந்துக்கள் வெகுண்டெழுந்து தங்களது சொத்துகளை சேதப்படுத்திக்கொண்டு இசுலாமியர்கள் மீது பழி சுமத்துவார்கள் என்று முதலமைச்சரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 1998 குண்டுவெடிப்புக்கு ஒருவாரம் முன்பும் இதுபோன்ற உளவு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தனது மச்சான், மாப்பிளை, பையனுக்கு வேண்டியவர்களை உடன் வைத்து கொள்ளாமல் நல்லவர்களை மட்டும் உடன் வைத்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறன். முரசொலி ஒரு toilet paper, அது பத்திரிகை அல்ல. கடலூர் சம்பவத்தில் நான் எந்த தவறும் செய்யாதபோது அதற்காக நான் எப்படி வருத்தம் தெரிவிக்க முடியும்.
முதலமைச்சர் கோவை செல்ல வேண்டும் என்று வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். என்றாலும் முதலமைச்சர் தற்போது முதுகுவலியுடன் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவர் வேகமாக குணமடைய வேண்டும். எனவே தற்போது அவரை கோவை செல்ல வேண்டும் என வலியுறுத்துவது நாகரீகமாக இருக்காது. பிரதமர் நவம்பர் 11ஆம் தேதி மதியத்திற்கு மேல் திண்டுக்கல்லில் உள்ள மகாத்மா காந்தி கிராமிய பல்கலைக்கு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்கு வருகிறார். அன்றைய தேதியில் கட்சி நிகழ்ச்சி ஏதும் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் சிக்கிய நபருக்கு பாஜக பயிற்சி ? சபாநாயகர் பரபரப்பு பேட்டி