சென்னை: போயஸ் கார்டன் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வசித்த அனைவருடைய வாக்குகளும் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை மாநகராட்சி தேர்தல் அலுவலர்கள் சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோரது பெயர்களை வாக்காளர் பட்டியலிலிலருந்து நீக்கியுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமமுக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் வைத்தியநாதன், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் சசிகலா தங்கி இருந்தார். தற்போது வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட உள்ளதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ள நிலையில், அந்த விலாசத்தில் இருந்த சசிகலாவின் பெயரை முறையான எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் தேர்தல் ஆணையம் நீக்கி உள்ளது.
தற்போது ஆட்சியில் உள்ள எடப்பாடி பழனிசாமி, சசிகாலவின் அடிப்படை வாக்குரிமையை நீக்க வேண்டும் என திட்டமிட்டு செய்துள்ளார். முதலமைச்சர் பதவியை வழங்கிய சசிகலாவுக்கு தொடர்ச்சியாக துரோகம் மட்டுமே செய்து வந்த பழனிசாமி தற்போது அவரின் அடிப்படை உரிமையை கூட பறிக்க திட்டமிட்டுள்ளார். எனவே தேர்தல் ஆணையம் உடனடியாக சசிகலா வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்" என வலியுத்தினார்.