சென்னை: தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்க வங்கிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவைத் தொடர்ந்து 110 விதிகளின்படி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீதுகளும், நகைகளும் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று (மார்ச்.30) மத்திய சென்னை கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளர்களுக்குக் கடன் தள்ளுபடி ரசீது மற்றும் நகைகள் வழங்கும் நிகழ்ச்சி பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 69 வங்கிகளில் நகை கடன் பெற்றிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சுமார் 30 கோடி மதிப்பிலான நகை கடன் தள்ளுபடி ரசீதுகள் மற்றும் நகைகளைப் பயனாளர்களுக்கு அமைச்சர்கள் வழங்கினர்கள். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களில் ரூபாய் 4,800 கோடி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இதுவரை 13 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியுள்ளவர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து நகை கடன் தள்ளுபடி ரசீது பெற்றுக் கொள்ளலாம். தற்போது மத்திய சென்னை கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட வங்கிகளில் கடன் பெற்ற ரூபாய் 30 கோடி மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளர்களுக்கு தள்ளுபடி ரசீதும், நகையும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி குறித்து தற்போது விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் நகை கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்பட்டது போல சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.