தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி, “ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இயங்குவதற்கு போதுமான நிதி இல்லாமல் இருக்கின்றன. ஏழை எளிய மாணவர்களின் கல்வி உதவிக்கு வழங்க வேண்டிய நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளும் நிதி பற்றாக்குறையில் இருப்பதால், மத்திய அரசு நிலுவையில் வைத்திருக்கும் தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நிதியை நாம் உடனடியாகக் கோர வேண்டும்.
மேலும் வளர்ச்சியான மாநிலமாகக் கருதப்படும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
அதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் நேரில் சந்தித்தபோதும், பின்னர் கடிதத்தின் வாயிலாகவும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
முன்னதாக, ஜிஎஸ்டியை தொடர்ச்சியாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை போதிய ஜிஎஸ்டி வருவாய் இல்லாததால் வழங்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்துள்ளதை, தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருந்தது இங்கே கவனிக்கத்தக்கதாகும்.
இதையும் படிங்க: சட்டத்தின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் - விஜயதரணி