தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜன.20) சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நான் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறேன்.
ஒரு அமைச்சராக இல்லாமல் மருத்துவராக ஐஎம்ஏ உறுப்பினராக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நான் தயாராக உள்ளேன். மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் வகையில் கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள உள்ளேன்” என்றார்.
முன்னதாக இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய ‘கோவேக்ஸின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.